''ருத்ர தாண்டவம்"; விமர்சனம்
நடிகர் | ரிச்சர்டு |
நடிகை | தர்ஷா குப்தா |
இயக்குனர் | மோகன் |
இசை | ஜூபின் |
ஓளிப்பதிவு | பரூக் பாஷா |
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக அவரை நியமிக்கின்றனர். தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார் ரிச்சர்ட். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கவுதம் மேனனுக்கும், நாயகன் ரிச்சர்டுக்கும் இடையே பகை உண்டாகிறது.
இதையடுத்து கஞ்சா கடத்தியதாக இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார் ரிச்சர்ட். அவரிடம் இருந்து எஸ்கேப் ஆக முயலும் அந்த இளைஞர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
அதில் ஒரு இளைஞர் மரணமடைந்துவிடுகிறார். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் தான், அவரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து, அவரது மரணத்துக்கு ரிச்சர்ட் காரணமாகிவிட்டதாக சர்ச்சை எழுகிறது.
இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படும் ரிச்சர்ட், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதையடுத்து ரிச்சர்ட் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? இல்லையா? இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட். மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் அவர் போலீஸ் கதாபாத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆக்ஷன், எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருக்கிறார் தர்ஷா குப்தா. முதல் படத்திலேயே கர்ப்பமான பெண் வேடம் ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். அவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.
கவுதம் மேனன், வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறது. போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் தம்பி ராமையா, வக்கீலாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, நீதிபதியாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
திரௌபதி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி, இப்படத்தை இயக்கி இருக்கிறார். திரெளபதி படத்தில் நாடக காதலைப் பற்றி திரைக்கதை அமைத்திருந்த அவர், ருத்ர தாண்டவத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் திறம்பட கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
ஜூபினின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். பரூக் பாஷாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.